×

இந்தியா – இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்: ராஜ்கோட்டில் பலப்பரீட்சை; முன்னிலை பெற முனைப்பு

ராஜ்கோட்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட், ராஜ்கோட்டில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அடுத்து விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 11 வீரர்கள் அடங்கிய அணியை இங்கிலாந்து நேற்றே அறிவித்துவிட்டது. முதல் 2 டெஸ்டிலும் ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் மட்டுமே களமிறங்கிய இங்கிலாந்து, ராஜ்கோட்டில் ஆண்டர்சன் – மார்க் வுட் கூட்டணியை களமிறக்குகிறது.

அதே சமயம், இந்திய அணி பேட்டிங் நடுவரிசையில் சில மாற்றங்கள் இருப்பது உறுதி. கோஹ்லி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் இல்லாத நிலையில்… இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு உருவாகி உள்ளது. முதல் தர போட்டிகளில் அமர்க்களப்படுத்தி வந்த சர்பராஸ் கான் (26 வயது), நீண்ட காத்திருப்பிக்குப் பின் சர்வதேச அரங்கில் அறிமுகமாகிறார். ஸ்ரீகர் பாரத்துக்கு பதிலாக துருவ் ஜுரெல் புதுமுக விக்கெட் கீப்பராக சேர்க்கப்படலாம். ராஜ்கோட் மண்ணின் மைந்தனான ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது, இந்தியாவுக்கு கூடுதல் பலமாக இருக்கும். இரு அணிகளுமே முன்னிலை பெறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆகாஷ் தீப், ஆர்.அஷ்வின், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், சர்பராஸ் கான், குல்டீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், தேவ்தத் படிக்கல், அக்சர் படேல், ரஜத் பத்திதார், ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஓல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

* இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்சுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.
* இந்திய ஸ்பின்னர் ஆர்.அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்டும் வாய்ப்புள்ளது. அவர் இதுவரை 97 டெஸ்டில் விளையாடி 499 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
* டெஸ்டில் 700 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்ட இங்கிலாந்து வேகம் ஆண்டர்சனுக்கு (41 வயது) இன்னும் 5 விக்கெட் தேவை. அவர் இதுவரை 184 டெஸ்டில் 695 விக்கெட் எடுத்துள்ளார்.
* ராஜ்கோட் ஆடுகளம் முதலில் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும், பின்னர் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று உள்ளூர் வீரரான ஜடேஜா தெரிவித்துள்ளார்.

The post இந்தியா – இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்: ராஜ்கோட்டில் பலப்பரீட்சை; முன்னிலை பெற முனைப்பு appeared first on Dinakaran.

Tags : India-England 3rd Test ,Rajkot ,India ,England ,Hyderabad ,India-England ,Test ,Dinakaran ,
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...